வாழ்நாள் கல்வி

பன்றி வளர்ப்பு

பன்றி வளர்ப்பு

பன்றி வளர்ப்பு

Facebook twitter googleplus pinterest LinkedIn


பன்றி இனங்கள்

நம் நாட்டில் நாட்டுப்பன்றிகளே வெகுகாலமாக வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றின் உடல் எடை மிகவும் குறைவு. எனவே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இனங்கள் நம் நாட்டு இனங்களை மேம்படுத்துவதற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வளர்க்கப்படும் அயல்நாட்டுப் பன்றி இனங்களாவன, லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர், லேண்ட்ரேஸ், மிடில் வொய்ட் யார்க்ஷயர் மற்றும் வட இந்திய வகையான குங்காரு.

 

பன்றி தேர்வு

பன்றிகளை இனவிருத்திக்காக தேர்வு செய்யும் போது கீழ்க்கண்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்

•              குட்டி ஈனும் திறன்

•              குட்டிகளின் உடல் பலம் மற்றும் வலிமை

•              பால் கொடுக்கும் திறன்

•              சினைப்பிடிக்கும் திறன்

இனப்பெருக்கத்திற்கு பெண் பன்றிகளைத் தேர்ந்தெடுத்தல்

  • பெண் பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்யும் போது அவற்றின் உடல் எடை 90 கிலோ இருக்க வேண்டும்
  • தெரிவு செய்யும் பெண் கிடேரி பன்றிகள் அதிக குட்டிகளை ஈனும் தாய் பன்றியிடமிருந்து தேர்வு செய்ய வேண்டும்
  • தேர்வு செய்யப்படும் பெண் பன்றிகள் குறைந்த காலத்தில் சந்தையில் விற்பதற்கு ஏதுவாக வளர்ச்சி அடைய வேண்டும்
  • நல்ல உடல் வளர்ச்சி மற்றும் தீவன மாற்றும் திறனுடைய குட்டிகளுடன் பிறந்த பெண் பன்றி குட்டிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்ய வேண்டும்
  • இனப்பெருக்கத்திற்காக ஆண் பன்றிகளை தேர்வு செய்யும் முறைகள்
  • பன்றி பண்ணையில் இனப்பெருக்கத்திற்கு ஆண் பன்றிகள் தேர்வு செய்வது முக்கியமாக சிறிய பன்றிப்பண்ணையில் மிக முக்கியமாகும்
  • ஆண் பன்றிகளை, பன்றிப்பண்ணையின் உற்பத்திதிறனை பற்றிய பதிவேடுகளுடன் குறித்து வைத்திருக்கும் பண்ணையிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்
  • ஆண் பன்றிகளை அதிக குட்டிகளை ஈனும் தாய் பன்றியிடமிருந்து தேர்வு செய்ய வேண்டும்
  • ஆண் பன்றிகளை தேர்வு செய்யும் போது அவற்றின் வயது 5-6 மாதமாகவும் அவற்றின் உடல் எடை 90 கிலோவாகவும் இருக்க வேண்டும். மேலும் அதன் கால்களும் குளம்புகளும் மிக உறுதியாக இருக்க வேண்டும்
  • பன்றி குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்கும் போது இருக்கும் உடல் எடையிலிருந்து அவை 90 கிலோ உடல் எடையினை அடைவதற்குமான தீவன மாற்றும் திறன் அதிகமாக இருக்க வேண்டும்
 

ஆண் மற்றும் பெண் பன்றிகளை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை

  • இனப்பெருக்கத்திற்கு தெரிவு செய்யப்படும் பன்றிக்குட்டிகளின் தாய் குறைந்தது 8 குட்டிகளையாவது ஒவ்வொரு ஈற்றிலும் ஈன்றிருக்க வேண்டும்
  • இனப்பெருக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் பன்றிகள் 6 மாத வயதில் 90 கிலோ எடை அடைந்திருக்க வேண்டும்
  • இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யப்படும் பன்றிகளின் உடல் நீண்டும் அவற்றினுடைய தசைகள் திரண்டு இருக்க வேண்டும்
  • பன்றிகளின் கால்களும் குளம்புகளும் நன்றாக இருக்க வேண்டும்
  • பன்றிகளில் முதுகுபுறத்திலுள்ள கொழுப்பு படலத்தின் அளவு ஆண் பன்றிகளுக்கு 3.2 செ.மீ ஆகவும் பெண் பன்றிகளுக்கு 4 செ.மீ ஆகவும் இருக்க வேண்டும்
  • இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யும் பெண் பன்றிகளுக்கு 12 மடி காம்புகள் சரியான இடைவெளியில் இருக்க வேண்டும். மேலும் மடி காம்புகள் சிறுத்திருந்தால் அப்பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்யக்கூடாது.
  • இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யும் போது பன்றிகள் லெப்டோஸ்பைரோஸிஸ் மற்றும் புருசெல்லோஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனவா இரத்தப்பரிசோதனை மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்
  • பன்றிகள் மற்ற நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்
 

பன்றிகளின் இனப்பெருக்க வயது

கிடேரி பன்றிகள் 12-14 மாத வயதில் முதல் முறை குட்டிகளை ஈனுமாறு அதனை ஆண் பன்றிகளுடன் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

சினைப்பருவத்தை கண்டறிதல்

பன்றிகளில் ஒரு சினைப்பருவத்திற்கும் மற்றொரு சினைப் பருவத்திற்கும் இடைவெளி சராசரியாக 21 நாட்களாகும். சினைப்பருவ காலத்தில் உள்ள பன்றிகளின் பெண் உறுப்பு சிவந்து காணப்படும். மேலும் இச்சினைப்பருவ அறிகுறிகள் 5-7 நாட்கள் வரை நீடிக்கும். சரியான சினைப்பருவ காலத்தில் உள்ள பன்றிகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கும். அவற்றின் தீவனம் எடுக்கும் அளவு குறையும். மற்ற பன்றிகளின் மீது ஏறும். மேலும் அவற்றின் காதுகள் விரைத்து நிற்கும். சினைப்பருவ காலத்திலுள்ள பன்றிகளின் முதுகை அமுத்தும் போது அவை ஆடாமல் நிற்கும். இவ்வாறு நின்றால் பன்றிகள் சரியான சினைப்பருவத்தில் இருக்கிறது என்று பொருள்.

சினைப்பன்றிகளை பராமரித்தல்

பன்றிகளின் சினைக்காலம் 109-120 நாட்கள். சராசரியாக அவற்றின் சினைக்காலம் 114 நாட்களாகும். சினைப்பன்றிகளை தனியாக மற்ற பன்றிகளுடன் சேர்க்காமல் பராமரிக்க வேண்டும். மேலும் அவற்றினை புதிதாக வாங்கிய பன்றிகளுடன் சேர்த்து வைத்திருக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் பன்றிகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு சினை கலைந்து விட வாய்ப்புண்டு. ஒவ்வொரு சினைப்பன்றிக்கும் 3 ச.மீ இட வசதி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் ஒவ்வொரு நாளும் சினைப்பன்றிகளை மேய்ச்சல் தரையிலோ அல்லது திறந்த வெளியிலோ சற்று நேரம் திறந்து விடுவது நல்லது. மேய்ச்சல் தரை சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.

 

பன்றி குட்டி போடும்முன் கவனிக்கவேண்டியவை

பன்றி வளர்ப்பில் மிக முக்கியமான தருணம் குட்டி போடும் தருணமாகும். பன்றிகளின் இறப்பு விகிதம் குட்டி போடும் தருவாயிலும், குட்டி போட்ட பின்பு முதல் வாரத்திலும் அதிகமாக இருக்கும். பன்றிகளுக்கான குட்டி போடும் கொட்டகையில் துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளைக்கொண்டு தடுப்பு அமைக்கப் பட்டிருக்க வேண்டும். மேலும் குட்டிகளுக்கு தனியாக இடம் அமைத்திருக்க வேண்டும். குட்டிகள் 3-4 நாட்கள் வயதாகும் வரை குட்டி போடும் கொட்டகையின் வெப்பநிலை 24 டிகிரி சி-28 டிகிரி சி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அவை ஆறு வார வயதாகும் வரை குட்டி போடும் கொட்டகையின் வெப்பநிலை 18சசி-22சசி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குட்டிகளுக்கென தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் சூடு உண்டாக்கும் பல்புகள் தரையிலிருந்து 45 செ.மீ உயரத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

பன்றிகளை குட்டி போடும் கொட்டகையினுள் விடுவதற்கு முன்பு அக்கொட்டகை நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குட்டிகளுக்கு ஏற்படும் பல வித நோய்கள் தடுக்கப்படும். குட்டி போடும் நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக சினைப்பன்றிகளை குட்டி போடும் கொட்டகைக்கு மாற்ற வேண்டும். குட்டி போடும் கொட்டகைக்கு மாற்றுவதற்கு முன் சினைப்பன்றிகளை நன்றாக கழுவ வேண்டும்.

இந்த சமயத்தில் அவற்றிற்கு அளிக்கப்படும் அடர் தீவனத்தில் மூன்றில் ஒரு பங்கு கோதுமைத்தவிடு இருக்க வேண்டும். குட்டி போடுவதற்கு ஒரு வாரத்தில் ஆரம்பித்து பன்றிகள் குட்டி போடும் வரை அவற்றிற்கு அளிக்கப்படும் தீவன அளவினை மூன்றில் ஒரு பங்காக குறைக்க வேண்டும். குட்டி போடும் நாள் நெருங்கியவுடன் பன்றிகளை நன்றாக கூர்மையாக கவனிக்க வேண்டும். தோராயமாக குட்டி போடுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு அவற்றிற்கு தீவனம் எதுவும் கொடுக்கக்கூடாது.

 

பன்றிகளுக்கான தீவனப்பராமரிப்பு முறைகள்

  • பன்றிகளுக்கு தீவனம் தயாரிக்கும் போது குறைந்த விலையில் கிடைக்கும் மூலப்பொருட்களையே உபயோகிக்க வேண்டும்
  • தானிய வகைகள்- மக்காச்சோளம், கம்பு, சோளம், கோதுமை, அரிசி அல்லது அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும் தானிய வகைகள் தீவனம் தயாரிக்கும் போது முக்கிய மூலப்பொருட்களாக உபயோகிக்க வேண்டும்
  • புரதச்சத்துக்காக பிண்ணாக்கு வகைகள், கருவாட்டு தூள் அல்லது இறைச்சித்தூள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்
  • பன்றிகளை மேய்ச்சலுக்கு அனுமதித்தாலோ அல்லது அவைகளுக்கு பசுந்தீவனம் அளித்தாலோ வைட்டமின் சத்துக்களை அளிக்கத் தேவையில்லை.பன்றிகளுக்கு விலங்கு புரதம் அளிக்கப்படாவிட்டால் வைட்டமின் பி 12 சத்து தீவனத்துடன் அளிக்கப்பட வேண்டும்
  • எதிரிஉயிரி மருந்துகள் 1 கிலோ கிராம் தீவனத்திற்கு 11 மில்லி கிராம் என்ற அளவில் கலந்து அளிக்கப்பட வேண்டும்
  • தாது உப்புகள் தீவனத்துடன் கலந்து அளிக்கப்பட வேண்டும்
 

பன்றிகளுக்கு ஏற்படும் நோயினை தடுத்தல்

எல்லா பன்றிகளுக்கும் 2-4 வார வயதில் பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியினை போட வேண்டும். மேலும் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் பன்றிகளை கன்று வீச்சு நோய் மற்றும் லெப்டோஸ்பைரோஸிஸ் நோய் பரிசோதனை செய்து நோயிருக்கும் பன்றிகளை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும். அனைத்து பன்றிக்குட்டிகளையும் தாயிடமிருந்து பிரிக்கும் போது பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட வேண்டும்.

பண்ணைக்கு வளர்ப்பதற்காக பன்றிகளை வாங்கும் போது அவற்றை நோயில்லாத பன்றி பண்ணையிலிருந்து வாங்க வேண்டும். புதிதாக வாங்கப்பட்ட பன்றிகளை பண்ணையிலுள்ள மற்ற பன்றிகளுடன் சேர்க்காமல் நான்கு வாரங்களுக்கு தனியாக பராமரிக்க வேண்டும். பன்றிப்பண்ணைக்குள் வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது. நோயினால் பாதிக்கப்பட்ட பன்றிகளை பன்றிக்கொட்டகையிலிருந்து அப்புறப்படுத்திய பின்பு அக்கொட்டகையில் பன்றிகளை 3-4 வாரங்களுக்கு அடைக்கக்கூடாது.

 

பன்றி சந்தைப்படுத்துதல்

பன்றி வளர்ப்பதில், இனவிருத்தி செய்யப் பயன்படுத்தும் பன்றிக்குட்டிகள், கொழுப்பு நிறைந்த பன்றிகள், முதிர்ந்த பன்றிகள் ஆகியவற்றை விற்பனை செய்யலாம். 2-3 மாதங்களுடைய பன்றிக் குட்டிகளை விற்பதால் அதிக லாபம் விரைவில் கிடைக்கிறது.