வாழ்நாள் கல்வி

முருங்கை

இயற்கை முறையில் முருங்கை சாகுபடி

முருங்கை

Facebook twitter googleplus pinterest LinkedIn


முருங்கை அறிமுகம்

முருங்கையின் தாயகம் இலங்கை. தமிழகத்தில் முருங்கை தவிர்க்கமுடியாத உணவுப்பொருள் ஆகிவிட்டது. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட முருங்கை தமிழர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்டது.

 

முருங்கை மண்வளம்

முருங்கை களர், உவர் மண் தவிர அனைத்து வகையான மண்களிலும் பயிரிடலாம். குறிப்பாக செம்மண் நிலத்துல முருங்கை நல்லா வளரும். 

உழவிடுதல் (Plowing)

நிலத்தை நன்றாக உழவு செய்து, 16 அடி இடைவெளியில் நீளமாக வாய்க்கால்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.

 

 

முருங்கை காலநிலை

பொதுவா வறட்சியான நிலத்துல முருங்கையைப் பயிரிடலாம். செடி முருங்கையைப் பொறுத்தவரை நடவு செஞ்ச ஆறாவது மாசத்துல இருந்து காய் கிடைக்கும். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாசங்கள்ல நல்ல விலை கிடைக்கறது வழக்கமா இருக்கு. அதனால ஏப்ரல், மே மாசங்கள்ல நடவு செஞ்சா, அது காய்ச்சு வர்றப்ப நல்ல விலை கிடைக்கும். ஆனா, இந்த மாசங்கள்ல மழை குறைவாத்தான் இருக்கும். அதனால தண்ணீர் வசதிக்கு ஏற்பாடு செஞ்சுக்கணும். வடிகால் வசதியும் கண்டிப்பா தேவை

 

முருங்கை விதைநேர்த்தி

தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை ஒரு துணியில் சுற்றி, சாணி கலந்த தண்ணீர் அல்லது பஞ்சகவ்யாவில் 24 மணி நேரம் ஊற வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளோடு ஒரு கருங்கல்லையும் சேர்த்து கட்டி வைத்து விட்டால் விதைகள் மிதக்காமல் இருக்கும்.

 

முருங்கை விதைப்பு முறை

நேரடி மற்றும் நாற்று என இரண்டு விதமான விதைப்பு முறைகள் உள்ளன.

நேரடி விதைப்பு முறை:

6 அடிக்கு 7 அடி அளவில் சதுரப்பாத்தி அமைத்து 1 க்கு 1 அகலம் மற்றும் 1 அடி ஆழத்தில் குழி எடுக்கவேண்டும். வட்டப்பாத்தியாகவும் அமைக்கலாம். குழியில் தொழு உரம், செம்மண் நிரப்பி இரண்டு அங்குல ஆழத்தில் விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 300 கிராம் விதைகள் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் மூன்று கைப்பிடி தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஒரு கைப்பிடி மண்புழு உரம் போட்டு நாட்டுமுருங்கை நாற்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்து 3 மற்றும் 5-ம் நாட்களில் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

நாற்று விதைப்பு முறை:

ஆற்று மணல், தொழு உரம், தோட்டத்து மண், செம்மண் கலந்து நிரப்பப்பட்ட நாற்றுப் பைகளில், நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு அங்குல ஆழத்தில் விதைத்து, தினமும் பூவாளியில் தண்ணீர் விட்டு வர வேண்டும். முளைவிட்ட பின், மூன்று நாட்களுக்கொருமுறை தண்ணீர் விட்டால் போதும். ஒரு மாத காலம் இப்படி வளர்க்கப்பட்ட நாற்றுகளை, உழுது தயார் செய்யப்பட்ட நிலத்தில் 6 க்கு 7 அடி பாத்தி அமைத்து ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி அகலம் மற்றும் ஒன்றரை அடி ஆழம் கொண்ட குழி எடுத்து, தொழு உரமிட்டு நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 900 செடிகள் தேவைப்படலாம். இந்த முறையில் நூறு கிராம் அளவுக்கு விதைகளை மிச்சப்படுத்தலாம். 

 

முருங்கை கவாத்து

எந்த முறையில் நடவு செய்தாலும், மேல் மண்ணைக் காயவிடாமல் தண்ணீர் கட்டிக் கொண்டே இருப்பது நலம். நுனிக் கொழுந்தை கிள்ளிவிட்டுக்கொண்டே வந்து பக்கவாட்டுக் கிளைகளை வளரும்படி செய்ய வேண்டும். அதிகமாக களைகள் வளராமல் பாதுகாக்க வேண்டும்.

20-ம் நாள் ஒவ்வொரு செடியின் தூரிலும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கை வைத்து பாசனம் செய்ய வேண்டும். 40 மற்றும் 70-ம் நாட்களில் புதிய இளம் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் பக்கவாட்டுக் கிளைகள் அதிகமாக வளரும். 120-ம் நாளுக்குள்  செடியின் வளர்ச்சியைப் பொறுத்து மூன்றாவது முறையாக கவாத்து செய்ய வேண்டும்.

 

முருங்கை உரமிடுதல்

6-ம் மாதத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு காய்ப்புக்கும் 40 நாட்கள் மட்டுமே காய் இருக்கும். காயை அறுவடை செய்வதற்கு முன்பாக, ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும். அதே போல மகசூல் முடிந்தவுடன், ஒவ்வொரு மரத்துக்கும் 30 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும். இதை முறையாகச் செய்தால்தான் தரமான விளைச்சல் கிடைக்கும்.

மண்புழு உரம், மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் மற்றும் உயிர் உரங்கள் இவற்றை தொடர்ந்து வேரில் இடுவதால் திரட்சியான மற்றும் எடை அதிகமான காய்கள் பெறலாம்.

 

முருங்கை பூச்சி, நோய் பராமரிப்பு

முருங்கை இலைகளில் (கீரை) துளைகள் தென்பட்டால் புழுத் தாக்குதல் என்று அர்த்தம். இந்தப்புழு கண்ணுக்குத் தெரியாது. இந்த அறிகுறி தெரிந்தால், இலைகள் முழுக்க நனையும் அளவுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

சில சமயங்களில் கம்பளிப்பூச்சித் தாக்குதல் இருக்கும். வேப்பெண்ணைக் கரைசல் அல்லது அடுப்புச் சாம்பலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். முருங்கையை அதிகம் தாக்குவது கம்பளிப் பூச்சிகள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள். அடுத்து மரங்களை துளைக்கும் புழு .இவற்றை எளிதாக கற்பூரகரைசல் மூலம் எளிதாக கட்டுபடுத்தலாம்.

மீன் அமினோ அமிலம் இலைகள் மீது தெளிப்பதாலும் வேரில் இடுவதாலும் கரும்பச்சை நிற இலைகளை பெறலாம். மற்றும் அதிக வளர்ச்சியும் இருக்கும். ஒவ்வொரு முறையும் பூவெடுக்கும் முன்பாக பஞ்சகவ்யா கரைசலைத் தெளித்து வந்தால், எந்த நோயும் தாக்காது. இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் வருவதில்லை.

 

முருங்கை மகசூல்

ஒரு செடியிலிருந்து ஒவ்வொரு பருவத்திலும் 35 கிலோ காய்கள் கிடைக்கும். ஒன்றரை வருடங்கள் வரை மகசூல் கிடைக்கும். அதன்பின் விளைச்சல் குறைந்துவிடும். அதனால் மறுபடி விதைக்க தயாராகிவிட வேண்டும்.

ஆண்டு முழுவதும் முருங்கைக்கு விலை கிடைக்காவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அறுவடை செய்யாமல் விட்டு விட்டால் முற்றி நெற்றாகும். அதில் இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு 240 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட காய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், விதை மூலம் கிடைத்து விடும்.