வாழ்நாள் கல்வி

மொச்சை விதை உற்பத்தி

மொச்சை விதை உற்பத்தி

மொச்சை விதை உற்பத்தி

Facebook twitter googleplus pinterest LinkedIn


மொச்சை விதை அறிமுகம்

மொச்சை பயறுத் தாவரம், அவரைக் குடும்பத் தாவரங்களுள் (ஃபேபேசியே) முக்கியமானது. தமிழகத்தில் புரதத் தேவையை நிறைவு செய்வதற்காக அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறி வகை, அவரைக் குடும்பத் தாவரங்களே. அந்த வகையில் மொச்சை மிக முக்கியமானது. தமிழகம் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் புரதத் தேவையை நிறைவு செய்யும் முக்கியப் பயறு வகை இது.

விதைப்பயிர் செய்ய ஏற்ற பருவம்

விதைகள் முதிரும் போது அதிக மழையோ, வெயிலோ, குளிரோ இல்லாத பருவமாக அமைந்திருத்தல் அவசியம். இதற்கு ஆடிப்பட்டம் மிகவும் ஏற்றது.

 

மொச்சை விதை நிலம் தேர்ந்தெடுத்தல்

மொச்சை விதைப் பயிருக்காக தேர்ந்தெடுத்த நிலத்தில் அதற்கு முந்திய பயிர் சான்று பெறாத அதே மொச்சை இரகமோ அல்லது வேறு இரகமோ இருக்கக் கூடாது. ஏனெனில், நிலத்தில் தங்கியுள்ள விதைகள் இப்பருவத்தின் போது முளைத்து கலவனாக தோன்றும் வாய்ப்புள்ளது. இதனால் விதைச் சான்று பெற இயலாது. மேலும் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய் தோன்றாத நிலமாயிருத்தல் அவசியம். நல்ல வடிகாலுள்ள செம்மண் மற்றும் வண்டல் மண் திரட்சியான விதைகளைத் தரும்.

 

மொச்சை விதை / உரம்

ஒரு ஏக்கருக்கு பத்து வண்டி மக்கிய தொழுஉரம் இட வேண்டும். பின்னர் கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு 25 கிலோ யூரியா, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோவும் அடியுரமாக பார்களின் பக்கவாட்டில் இடவேண்டும்.

விதைத் தேர்ந்தெடுத்தலின் அவசியம்

விதை உற்பத்திக்கு சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சான்று விதைகள் இனத்தூய்மையுடன் இருப்பதால் வயல்களில் கலவன் தோன்றுவது தவிர்க்கப்பட்டு விதைப் பயிரின் இனத்தூய்மை பாதுகாக்கப்படுகிறது.

விதை அளவு

ஒரு ஏக்கர் பயிரிட 8 கிலோ கோ.1 இரக விதையும், 10 கிலோ கோ.2 இரக விதையும் தேவைப்படும்.

விதை நேர்த்தி 

கீழே கொடுக்கப்பட்டுள்ள உரம் மற்றும் இரசாயனப் பொருட்களை நூறு லிட்டர் நீரில் கரைத்து விதைக்க வேண்டும். பின்னர் காய்பிடிப்பின் போதும் தெளிக்க வேண்டும்.

பூரியா – 2.5 கிலோ

டி.ஏ.பி – 650 கிராம்

மியூரியேட் ஆப் பொட்டாஷ் – 440 கிராம்

பொட்டாசியம் சல்பேட் - 9 கிராம்

டீபால் – 40 கிராம் போன்றவற்றை 100 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

கோ.1 இரகமாக இருந்தால் விதைத்த 100-வது நாளும், பின்னர் 120-வது நாளும் என இருமுறை அடிக்க வேண்டும்.

கோ.2 இரகமாக இருப்பின் விதைத்த 45-ஆம் நாளும் பின்னர் 55-ஆம் நாளும் தெளிக்க வேண்டும்.

விதைப்பு

விதைகளை பார்களில் பக்கவாட்டில் விதைக்க வேண்டும். குழிக்கு இரண்டு விதையாக 5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். செடிக்குச் செடி இடைவெளியாக கோ.1 இரகத்திற்கு ஒரு அடியும், கோ.2 இரகத்திற்கு அரை அடியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

மொச்சை விதை ஒருங்கிணைந்த நிர்வாகம்

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் முளைப்பு நீரும், மூன்றாம் நாள் உயிர் நீரும் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பூப்பு, காய்ப்படிப்பு மற்றும விதை முதிர்ச்சி ஆகிய பருவங்களில் மண்ணில் ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

களை நிர்வாகம்

ஆரம்பத்தில் தோன்றும் களைகளைக் கட்டுப்படுத்த விதைத்த மூன்று நாட்களுக்குள் பாசலின் களைக்கொல்லியை ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 250 லிட்டர் நீர் தேவைப்படும் எனவே 500 மில்லி பாசலின் தேவை. களைக்கொல்லி தெளித்த 25 ஆம் நாள் ஒரு கைக்களை எடுத்து களைகளை நன்றாக கட்டுப்படுத்தி, மகசூலை அதிகப்படுத்தலாம்.

நோய் பாதுகாப்பு

ஆன்த்ரக்னோஸ் இலைப்புள்ளி நோய் தோன்றினால் ஒரு லிட்டர் நீரில் 1 கிராம் பெவிஸ்டின் அல்லது 4 கிராம் மான்கோசெப் பூசணக் கொல்லிகளில் ஏதாவது ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

மொச்சை விதை அறுவடை

விதைகள் கோ.1 இரகத்தில் 50 சத பூப்பிலிருந்து 33 நாட்கள் கழித்தும் கோ.2 இரகத்தில் 25 நாட்கள் கழித்தும் முதிர்ச்சி அடையும். அப்போது காய்களின் பச்சை நிறம் மாறி பழுப்பு நிறமடையும். காய்கள் அதிகமாக சுருங்கியோ, நிறம் மாறியோ காணப்பட்டால் அவற்றை நீக்கிவிட வேண்டும்.

 

மொச்சை விதை உருவாக்கம்

தேர்ந்தெடுத்த காய்களை நிழலில் உலர்த்தி நன்கு காயவைக்க வேண்டும். பின்னர் விதைகளை குச்சி கொண்டு அடித்து பிரித்து அவற்றை காற்றில் தூற்றி சுத்தம் செய்ய வேண்டும். விதைகளை 18/64” (7 மி.மீ) அங்குல வட்டக்கண் சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும். விதைகளில் காணப்படும் உடைந்த, சுருங்கிய, பூசணம் தாக்கிய விதைகளை நீக்கிவிட வேண்டும்.

விதைச் சேமிப்பு

விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.

விதையின் ஈரப்பதம்

விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 9 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 8 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வையுங்கள்.

விதைச் சேமிப்புப் பைகள்

விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை என்பது உங்களுக்குத் தெரிந்ததே. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். ஈரக்காற்று புகா பைகள் எவை? 700 அடர்வுள்ள பாலிதீன் பைகளே காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள்.

விதைகளை, கிடங்குகளில் சேமித்து வைக்கும்பொழுது முன்னெச்சரிக்கையாக இருங்கள். சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும்பொழுது 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்க வேண்டாம். ஏனென்றால், மேலே உள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளைப் போட்டு அழுத்துவதால் அடி மூட்டையில் உள்ள விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

விதை மூட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் சுவற்றின் மீது சாய்த்து அடுக்குதலையும் தவிர்க்க வேண்டும். இதனால் தரை மற்றும் சுவற்றில் உள்ள ஈரப்பதம் விதைகளில் ஊடுருவி அவற்றைப் பாதிப்பதைத் தடுக்கலாம். எப்பொழுதும் விதை மூட்டைகளை மரக்கட்டைகளின் மீது அல்லது தார்பாய்களின் மீது அடுக்கி வையுங்கள்.

விதைச் சேமிப்புக் கிடங்கு பராமரிப்பு

சேமிப்புக் கிடங்கை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். விதை சேமிப்புக் காலத்தில் விதைகளை பூச்சிகள் தாக்கினால் புகை மூட்டம் போடலாம். காற்றுப் புகாமல் விதைக் கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் (அலுமினியம் பாஸ்பைடு) நச்சு மாத்திரைகளை ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் விதை கிடங்கினுள்ளே 3 நாட்கள் வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர் நச்சுக்காற்றை வெளியேற்ற நல்ல காற்றோட்டம் இருக்கும்படி விதைக்கிடங்கை திறந்து வையுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகள் பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

விதைச் சேமிப்பு

விதைகளை நன்கு சேமிக்க அவற்றை 7 - 8 சத ஈரப்பதம் வரை காய வைத்து பின்னர் கிலோவுக்கு 2 கிராம் காப்டான் பூசணக் கொல்லி மருந்துடன் விதைநேர்த்தி செய்து சேமிக்க வேண்டும்.