வாழ்நாள் கல்வி

வெள்ளரி சாகுபடி

வெள்ளரி சாகுபடி

வெள்ளரி சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


வெள்ளரி அறிமுகம்

வெள்ளரி ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். குறைந்த வெப்ப நிலை கொண்ட பருவ சாகுபடிக்குச் சிறந்ததாகும். மொத்தம் 120 நாள் பயிர்.  ஆடி மாதத்தில் மேல் காற்று வீசுவதற்கு முன்பாக வெள்ளரி அறுவடை முடிவது மாதிரிதான் விதைக்க வேண்டும். வெள்ளரி சிறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்ற பயிர்.

 

வெள்ளரி மண்

வெள்ளரி சாகுபடி செய்ய உப்புத் தன்மை இல்லாத, வடிகால் வசதியோடு இருக்கும் எல்லா மண் வகைகளும் ஏற்றது.

பருவம்

ஜூன்- செப்டம்பர் மாதங்களிலும், டிசம்பர்- மார்ச் மாதங்களிலும் சாகுபடி செய்யலாம். வெள்ளரிக்கு தைப் பட்டம்தான் சிறந்தது.

 

வெள்ளரி நிலம் தயாரித்தல்

 

நான்கு தடவை டிராக்டர், ஒரு தடவை மாடு என்று உழவு செய்து, நிலத்தைப் பண்படுத்த வேண்டும். எட்டு அடி இடைவெளியில் ஒரு அடி அகலம், ஒரு அடிநீளம், ஒரு அடி ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும். குழிக்கு எரு- அரை கூடை, டி.ஏ.பி.-15 கிராம் கலந்து கொட்டி, மேல் மண்ணோடு சேர்த்துக் குழியை மூடவேண்டும்.

விதையளவு

வெள்ளரி சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவைப்படும்.

 

வெள்ளரி நடவு

குழியின் மையத்தில் இரண்டு அங்குல ஆழத்தில் வரிசையாகப் பத்து விதைகளை ஊன்றி, மண்ணை மூடி, தண்ணீர் ஊற்ற வேண்டும். மூன்றாவது நாளில் முளைவிடும். பத்து நாள் வரைக்கும் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் காலையில் தண்ணீர் ஊற்றவேண்டும். 20-ம் நாளில் மண்ணில் படர்ந்திருக்கும் கொடிகளை ஒதுக்கி விட்டு, மீதி இடங்களில் உள்ள மண்ணை நன்றாகக் கொத்திவிட வேண்டும். வேரைச் சுற்றி குழி எடுத்து, எரு-அரை கூடை, டி.ஏ.பி.-50 கிராம், யூரியா-50 கிராம், பொட்டாஷ்-50 கிராம் ஆகியவற்றைக் கலந்து வைத்து, மண் அணைக்க வேண்டும். 60-ம் நாளில் இதே அளவு உரத்தை மீண்டும் வைக்கவேண்டும்.

நீர் பாய்ச்சுதல்

விதை ஊன்றியவுடன் குடம் வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு விதை முளைத்து செடி வளர்ந்தவுடன் வாய்க்கால் மூலமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடி நன்றாக வளர்ந்தவுடன் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

பின் செய் நேர்த்தி

விதை முளைத்து வந்தவுடன் குழிக்கு மூன்று செடி விட்டு மற்ற செடிகளைப் பிடுங்கி விட வேண்டும். கொடி வளர்ந்தவுடன் குழியை 30 நாள்கள் இடைவெளியில் களை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியான 25 பிபிஎம் என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் 2.5 மில்லி கிராம் அளவில் கலந்து இரண்டாம் இலைப் பருவத்தில் முதல் முறையும், அதன் பிறகு 7 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் பெண் பூக்களின் உற்பத்தியை அதிகப்படுத்தலாம். விதை ஊன்றி 30 நாள்கள் கழிந்த நிலையில் 50 கிராம் யூரியாவை மேலுரமாக இடலாம்.

 

 

வெள்ளரி பயிர் பாதுகாப்பு

பூசணி வண்டு, பழ ஈயின் தாக்குதல் இருக்கும். அப்படி இருக்கும் போது பூசணி வண்டைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் கார்பரைல் கிராம் கலந்து தெளிக்க வேண்டும். பழ ஈயை கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி லிட்டர் கலந்து தெளிக்கலாம். மேலும் பழ ஈயை கருவாட்டுப் பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம்.

 

வெள்ளரி அறுவடை

விதை ஊன்றிய 50 நாளில் வெள்ளரிக் காய்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும். அதன் பிறகு 8 முதல் 10 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்வதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 8-இல் இருந்து 10 டன் வெள்ளரிக் காய்கள் கிடைக்கும்.