வாழ்நாள் கல்வி

கொய்யா சாகுபடி

கொய்யா சாகுபடி

கொய்யா சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


கொய்யா அறிமுகம்

இது ஆப்பிள் பழத்துக்கு நிகரான சத்துகளையும், சுவையையும் கொண்டிருப்பதால் "ஏழைகளின் ஆப்பிள்' எனப்படுகிறது. இது வெப்ப மண்டலத்தில் வளரக்கூடிய ஒரு பழப்பயிர்.

மண்வளம், தட்பவெப்பம்

வெப்ப, மித வெப்ப மண்டல பயிரான இது, கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரமுள்ள பகுதிகளிலும் வளரும். ஆண்டின் மழையளவு ஆயிரம் மிமீ வரை உள்ள இடங்களில் மரத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இம்மரம் தனது கடினத் தன்மையால் வண்டல் மண்ணிலிருந்து அனைத்து வகையான மண், காலநிலைகளில் சிறந்து வளர்கிறது. மேலும், நல்ல வடிகால் வசதி உடைய நிலங்களில் சாகுபடி செய்யலாம். இதற்கு மண்ணின் கார அமிலத்தன்மையானது 4.5 முதல் 7.5 சதம் என்ற அளவில் இருக்க வேண்டும். இளஞ்செடிகள் வறட்சி, குளிர்ச்சியைத் தாங்காது.

ரகங்கள்

•      லக்னோ 49,

•      அலகாபாத் சபேதா,

•      அரிஜா,

•      ஆப்பிள்,

•      பனாராசி,

•      அர்கா,

•      மிர்துளா,

•      அர்கா

•      அமுல்யா,

•      சிட்டிடார்,

•      ரெட்பிளஸ்,

•      சபேத் ஜாம்,

•      கோகிர் சபேதா,

•      லலித், ஸ்வேதா

 

கொய்யா நிலம் தயார்படுத்துதல்

கொய்யா பயிரிட இருக்கும் நிலங்களை 2 முதல் 4 முறை உழுது 0.6 மீட்டர் ஆழம், அகலம் என்ற அளவில் குழி தோண்டி மேல் மண்ணுடன் 20 கிலோ தொழுஉரம், 500 கிராம் சூப்பர் பாஸ்பேட் கொண்டு நிரப்ப வேண்டும். கன்றுகளை குழி நடுவே நட்டு மண்ணால் அணைக்க வேண்டும். பருவமழை தொடங்கும்போது நட வேண்டும்.

அடர்த்தி நடவு

நிலத்தின் தன்மை, மண்வளம், நடவுமுறை பொறுத்து ஏக்கருக்கு 112 செடிவரை நடலாம். எனினும், இது பொதுவாக 3.6 மீட்டரிலிருந்து 5.4 மீட்டர் இடைவெளியில் நடப்படுகிறது. இதில் பழத்தின் எடை, அளவு குறைவாக இருந்தாலும் ஒரு மரத்தின் பழங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

 

கொய்யா ஒருங்கிணைந்த மேலாண்மை

நீர் மேலாண்மை

பொதுவாக, கொய்யா மரங்களுக்கு நீர்ப் பாசனம் தேவையில்லை. ஆனால், தொடக்க நிலையில் இளஞ்செடிகளுக்கு ஓராண்டுக்கு 8 முதல் 10 முறை நீர்ப்பாசனம் அவசியம். முழு வளர்ச்சி தாங்கிய மரங்களுக்கு மே, ஜூலையில் வாராந்திர இடைவெளியில் நீர்ப் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் மூலம் 60 சதவீதம் தண்ணீர் சேமிப்பதுடன் பழத்தின் எடை, அளவு கணிசமாக அதிகரிக்கும்.

உரம், சத்து மேலாண்மை

100 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து, 40 கிராம் பொட்டாஷ் ஆகிய உரங்களை நட்ட 6ஆம் ஆண்டில் கொடுக்க வேண்டும். தழைச்சத்து, பொட்டாஷ், சாம்பல் சத்தை இரு பாகங்களாக முறையே ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் அளிக்க வேண்டும்.

நுண்ணூட்ட சத்துகள்

பூக்கள் பூக்கும் முன்பு போரிக் அமிலம் (0.1), ஜிங்க் சல்பேட் போன்ற கலவையை இலை வழியாக தெளிப்பதன் மூலம் பழத்தின் அளவு, மகசூலை அதிகரிக்க முடியும். காப்பர் சல்பேட் (0.20.4) தெளிப்பதன் மூலம் தாவரங்களின் வளர்ச்சி, மகசூலை அதிகரிக்கலாம்.

பின்செய் நேர்த்தி

களைகள் பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்தி 30 முதல் 40 சதவீதம் வரை மகசூலைக் குறைக்கிறது. களைக்கொல்லியாக கிராமக்சோன் தெளிக்க வேண்டும். பழத்தோட்டத்தில் மண் வளத்தை மேம்படுத்த 2 முதல் 3 முறை நிலத்தை உழ வேண்டும். மேலும், ஆண்டுக்கு 2 முறை மூடாக்கு காகித விரிப்பு மூலம் மண்ணின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கலாம்.

 

கொய்யா ஊடுபயிர்கள்

•      பச்சை பயிர்,

•      உளுந்து,

•      தக்காளி மற்றும் பீட்ரூட்

•      சாம்பல் பூசணி,

•      வெள்ளரி, அன்னாசி,

•      பீன்ஸ்,

•      முட்டைக்கோஸ்

கவாத்து

கொய்யா மரங்களில் கவாத்து செய்வதன் மூலம் பழத்தின் தரம், மகசூலை அதிகரிக்க முடியும். காய்களைத் தாங்குவதற்கேற்ப கிளைகளின் வலுவான கட்டமைப்பை உருவாக்குகிறது. இதற்காக, தரைமட்டத்திலிருந்து வெளியே வரும் தளிர்களை 30 செமீ வரை துண்டிக்க வேண்டும். மேலும், 4 தூக்குக் கிளைகளை வளரவிட்டு நடுப்பகுதியைத் திறக்க வேண்டும்.

பயிர் ஒழுங்குபடுத்தல்

பருவகால பயிர் ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் பயிர்கள் தரம் உயர்ந்தும், அதிக விலைக்கும் போகும். எனவே, விவசாயிகள் பெரும்பாலும் பூக்களைக் கிள்ளிவிடுவதன் மூலம் பருவகாலப் பயிர்களை தவிர்க்கின்றனர். இதற்காக, மாலிக் அமிலம், நாப்தாலிக் அமிலம் மற்றும் 2.4 டி (30 பிபிஎம்) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். மேலும், வேர்களைக் கவாத்து செய்வதன் மூலமும், வேர்களை வெளியே எடுத்து விடுவதன் மூலமும், சில நேரம் கிளைகளை வளைத்துவிடுவதன் மூலமும், தேவையற்ற இலைகளை வெட்டிவிடுவதன் மூலமும் பூக்களை அரும்ப செய்யலாம்.

பயிர்ப் பாதுகாப்பு

பழ ஈக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் ஒரு லிட்டருக்கு பாஸ்போம்டான் 0.5 மி.லி. மருந்தை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மாவுப் பூச்சியை அழிக்க மாலத்தியான் ஒரு லிட்டருக்கு 2 மி.லி மரத்தைச் சுற்றி பாலிதீன் பையைக் கட்டுவதன் மூலம் தடுக்கலாம்.

நோயைப் பொறுத்தவரை வேரழுகல், இலைப்புள்ளி நோய் அதிக சேதம் ஏற்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த குயினால் சல்பேட்டை ஊசி மூலம் செலுத்தியும், காப்பர் ஆக்சிகுளோரைடையும் ஒரு லிட்டருக்கு 2 மி.லி. பயன்படுத்தலாம்.

 

கொய்யா அறுவடை

பதியன், காற்றடுக்குதல், ஒட்டுக் கட்டுதல் மூலம் நடப்பட்ட மரங்கள் 2 முதல் 3 ஆண்டில் காய்க்கத் தொடங்கும். பொதுவாக, காய்களை பழுக்கும் நிலையில் மரத்தில் தக்கவைக்கக் கூடாது. அடர்பச்சை நிறத்திலிருந்து வெளிறிய பச்சை அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிறமாக மாறும்போதே அறுவடை செய்ய வேண்டும். ஒட்டுக் கட்டிய ஒரு மரத்திலிருந்து 350 கிலோவரை மகசூல் கிடைக்கும். 5 முதல் 7 ஆண்டுவரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும். நாற்றுகள் மூலம் சாகுபடி செய்யப்படும் ஒரு மரத்திலிருந்து 90 கிலோ பழங்கள் கிடைக்கும்.