வாழ்நாள் கல்வி

பாகற்காய் சாகுபடி

பாகற்காய் சாகுபடி

பாகற்காய் சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


பாகற்காய் அறிமுகம்

மருத்துவக் குணம் கொண்ட மைமோர்டிகா சாரண்டியா என்ற தாவரவியல் பெயர் கொண்டது பாகற்காய்.  கொடி வகையைச் சேர்ந்த பாகற்காய் வெப்பப்பிரதேச காயாகும். பாகற்காயானது கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைப்படும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், எண்ணற்ற மருத்துவ குணங்களை அடங்கியுள்ளது. பாகற்காயின் தாயகம் இந்தியா ஆகும். 

 

பாகற்காய் ரகங்கள்

எம்.டி.யூ. 1, அர்காஹரித், ப்ரியா, பிரீத்தி, கோபிஜிஎச்1, என்.எஸ். 244, என்.எஸ். 453, யு.எஸ் 6214, யு.எஸ். 390, அபிஷேக் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு உகந்தவை.

 

பாகற்காய் விதை

ஏக்கருக்கு 1 கிலோ 800 கிராம் விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை 2 மீட்டர், குழிக்கு குழி 1.5 மீட்டர் இடைவெளி விட்டு நடவேண்டும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

 

பாகற்காய் பருவம்

ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலம் சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும். அங்ககச் சத்து கொண்ட கார அமிலத்தன்மை கொண்ட நல்ல மண் கொண்ட மணற்சாரி வண்டல் மண் ஏற்றது.

 

பாகற்காய் உழவு

நடவு வயலினை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஒருமுறையும்பின் சட்டி கலப்பை கொண்டு ஒருமுறையும்அதற்கடுத்து கொக்கி கலப்பை கொண்டு மூன்று முறையும் உழவு செய்ய வேண்டும்.

 

பாகற்காய் நீர் பாய்ச்சுதல்

மூன்று முறை நன்கு உழுது, குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு கன அடி அளவில் குழிகள் எடுத்து நீர்பாய்ச்சி குழிக்கு 5 விதைகள் ஊன்ற வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். பின் குழிக்கு 2 செடிகள் விட்டு 15-ஆம் நாள் கலைத்துவிட வேண்டும்.

 

பாகற்காய் உரமிடல்

குழிக்கு 10 கிலோ தொழு உரம், 15 கிராம் யூரியா, 75 கிராம் சூப்பர் பாஸ்பேட், 20 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இடவேண்டும். விதைத்த 30-ஆம் நாள் குழிக்கு 20 கிராம் யூரியா மேலுரமாக இடவேண்டும்.

10 லிட்டர் நீரில் இரண்டரை மி.லி. கலந்து பெறப்பட்ட 250 பி.பி.எம். எத்திரல் கரைசலை விதைத்த 15-ஆம் நாள் முதல் வாரம் ஒரு முறை வீதம் நான்கு முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் ஆண் பூக்களின் எண்ணிக்கை குறைந்து பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மகசூலும் அதிகரிக்கும்.

 

பாகற்காய் களையெடுத்தல்

கொடிகள் படர கல்தூண்கள், கம்பிகள் கொண்டு இரண்டு மீட்டர் உயரத்தில் முறையாகப் பந்தல் அமைக்க வேண்டும். மூன்று முறை களை எடுக்க வேண்டும்.

 

பாகற்காய் பூச்சி நோய் நிர்வாகம்

வண்டுகள் மற்றும் இலை தின்னும் புழுக்களை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. மாலத்தியான் 50 ஈ.சி. அல்லது டைமீதோயேட் 30 ஈ.சி. அல்லது மிதைல் டெமட்டான் 25 ஈ.சி. மருந்துகளில் ஒன்றை தெளிக்கவும். பழ ஈயைக் கட்டுப்படுத்த நன்கு உழவு செய்து, பழ ஈயின் கூட்டுப்புழுக்களை வெளிப்படுத்தி அழிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட காய்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். இப்பழ ஈயின் தாக்குதல் வெப்பக் காலத்தில் மிகக் குறைவாகவும், மழைக்காலத்தில் மிக அதிகமாகவும் இருக்கும். எனவே, அதற்கேற்ப விதைப்பு தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஒரு பாலிதீன் பையில் 5 கிராம் நனைந்த கருவாடு ஒரு மி.லி. டைக்குளோர்வாஸ் நனைத்து பஞ்சு வைத்த கருவாட்டுப் பொறிகளை ஏக்கருக்கு இருபது என்ற அளவில் வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

புள்ளிச் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. டினோகாப் அல்லது அரை கிராம் கார்பண்டசிம் மருந்துகளில் ஒன்றை தெளிக்கலாம். அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் மாங்கோசெப் அல்லது குளோரோதலானில் மருந்துகளில் ஒன்றை 10 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவும்.

லிண்டேன் பூச்சிக்கொல்லி மற்றும் தாமிர, கந்தகப் பூசணப் கொல்லிகள் இப்பயிர்களுக்கு தாவர நச்சாகப் பயிரை பாதிப்பதால் அவற்றை உபயோகிக்கக் கூடாது.

 

பாகற்காய் அறுவடை

விதைத்த 60-65 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பிறகு வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். விதைகள் முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும் முன்பே காய்களை அறுவடை செய்யவேண்டும். ஏக்கருக்கு 140 – 150 நாட்களில் 14 டன் காய்கள் வரை கிடைக்கும்.

 

பாகற்காய் ஊடுபயிர்

பந்தல் முறையில் பீர்க்கங்காய், புடலங்காய் ஆகியவற்றை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.